குறைந்தபட்ச ஆறுவித்தியாசங்கள்

 

இரண்டு படங்களையும் நன்கு உற்றுப்பாருங்கள்.
தமிழனின் இரத்தங்குடித்த சாயல் தெரியவில்லை?
அரசியலும் சரி;
தனிப்பட்ட வாழ்விலும் சரி; இவர்களுக்கிடையில் குறைந்தபட்ச ஆறுவித்தியாசங்கள்கூட
காண்பது கஷ்டம்.
ஆனால், ஒற்றுமைகளோ.....
ஏராளம் ஏராளம்!
உளதோ இலதோ என்று கண்டுபிடிக்க முடியாத வாழ்க்கைத்துணைகள்.
ஆளுக்காள் இலக்கியநயத்தோடு பரிமாறிக்கொள்ளும் பட்டங்கள்!
அப்பப்பா! இவர்கள் இருவரதும் கூட்டுத்தயாரிப்பில் அவ்வப்போது வெளிவரும் நகைச்சுவைக்காட்சிகள் வெகு அபாரம்!
தமிழனிடமே கொள்ளையடித்துத் தமிழன் தலையிலேயே சம்பல் அரைக்கலாம் எனும் தொழிநுட்பத்தைக்கண்டுபிடித்தவர் தாமாக இருந்தாலும் , தமது அனுமதியின்றி அதே தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி, தம்மைவிடவும் அதிகமாக ஜெயலலிதா சம்பாதித்துவிட்டாரே என்பதில் கருணாநிதிக்குப் பொறாமை. இதனால்,காந்தாரி- பூலான்தேவி இப்படியான பல பட்டங்களை அள்ளி வழங்கியிருந்தார். பதிலுக்கு அந்த அம்மாவும் தமது அறிவுக்கெட்டியவரை,
‘ மைனாரிட்டி அரசு’ அப்படி இப்படி என்று ஏதேதோ புலம்பிக்கொண்டிருந்தது. ஆனாலும் அண்மைக்காலமாக இவர்களது சாக்கடை அரசியலுக்குத் தீனிபோடுவது என்னவோ ஈழத்தமிழர்களின் விலைமதிப்பற்ற உயிர்களே!
”நான் பதவியிலிருக்கும்போது, நீ ஆதரவுபோலக்க்காட்டிக்கொள்! ---
நீ இருக்கும்போது நான் காட்டிக்கொள்கிறேன்” என்பது இவ்விருவருக்குமிடையே எழுதப்படாத - பேசப்படாத
ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
இதிலும் தொட்டு / அதிலும் தொட்டு
இது தேவைப்படும்போது அதைத்தூற்றி _
அது தேவைப்படும்போது இதைத்தூற்றி
அடடா! என்ன ஒரு சாணக்கியமான நகர்வு!
அதற்காக, இவர்களொன்றும் பெரிய சாணக்கியர்கள் என்று அர்த்தம் இல்லை.
அவ்வளவுக்கு, தமிழன் இளிச்சவாயன் ஆக இருக்கிறான்.
இதில் நூறில் ஒருபங்கு கூட எங்கே அடுத்தமாநிலங்களில் அவியுமா?
தமிழீழமோ / தமிழகமோ _ தமிழனிடம் எல்லாம் அவிகிறது.
கருநாடகத்திலோ\ ஆந்திராவிலோ நின்று அவர்களது மொழியை இரண்டாந்தரமானமொழி என்று சொல்லிவிட்டு எவரும்
எல்லைதாண்டவே முடியாது.
ஆனால், தமிழகத்தில், தமிழனின் பணத்திலேயே மேடைபோட்டு, நாள்கணக்கில் நின்று சொல்லமுடிகிறதே! உலகிலேயே தமிழனைவிட இளிச்சவாயன் இல்லை என்பதற்கு இதைவிடவும் என்ன அத்தாட்சிவேண்டும்?
இப்போது புத்தம்புதியவெளியீடாக ஒரு நகைச்சுவைக்காட்சி வந்திருக்கிறது. ஏனெனில், தேர்தல் வருகிறது இல்லையா?
ஈழத்தமிழனுக்கு உருகுவதுபோல தலையங்கத்தை இட்டு, காங்கிரசுக்கு ஆதரவாக தாம் என்னென்ன செய்திருக்கிறோம் என்பதைக் காங்கிரசுக்குக் குறிப்பால் உணர்த்துகிறார்கள் இருவரும் ! இது காங்கிரசுக்கு மட்டுமே புரியும் என்பது இவர்கள் இருவருக்கு மட்டுமே புரியும்.
இதில், தம்மைவைத்து இவர்கள் ‘ காமெடி’ பண்ணுகிறார்கள் என்றவிடயம் தமிழனுக்குப்புரியாது என்பதற்காகத்தான் , இந்தத்தலைப்பில் அது நடக்கிறது என்றவிடயம் காங்கிரசுக்கும் புரியும்.
இவர்களின் நகைச்சுவை விவாதங்களைத்தொகுத்து, புள்ளிகள் வழங்கி
யார் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ
அவருக்கே அடுத்த கூட்டணிக்கான அழைப்பு காங்கிரசிடமிருந்து கிடைக்கும்.
தமிழினத்துக்கே ஒரு இக்கட்டான நேரம் இது!
ராசபச்சேயைத்தூக்கிலிடுவதால் மட்டும் , தமிழனுக்கு விடிவு வந்துவிடுமா என்று உலகத்தமிழர்கள் ஆராய்ந்துகொண்டிருக்கும் நேரம் இது!
ஒரு ராசபச்சேயைத்தூக்கிலிட்டுவிட்டு , மற்றொரு ராசபச்சேயிடம் எம்மை
இந்த உலகம் ஒப்படைத்துவிடுமோ என்று தமிழன் எச்சரிக்கை அடையவேண்டிய நேரம் இது!
எமது இலக்கு ,தமிழீழம் என்பதிலிருந்து திசைமாறி - ராசபச்சேக்களைத் தூக்கிலிடுவதுடன் முடிந்துவிடுமோ என்று , தமிழுணர்வாளர்களெல்லாம் அச்சத்துடன் நோக்கும் நேரம் இது !
இத்தனை குழப்பங்களில் தவிக்கும் தமிழனையே பயன்படுத்தி, தனது அரசியல் எதிரியை அழித்தொழிக்க நினைக்கிறார் ஜெயலலிதா!
ராசபச்சேஉடன் சேர்த்து கருணாநிதியையும் தூக்கிலேற்றிவிட்டால்.....
பிறகென்ன? காலாகாலத்துக்கும் தாம்தானே தனிக்காட்டுராணி!
மனப்பால் குடிக்கிறார்.
போகிறபோக்கைப்பார்த்தால், நூறு தாண்டினாலும் இது போகாது போல இருக்கே! அச்சம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது அம்மாவுக்கு. எனவே -
கருணாநிதியையும் போர்க்குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளட்டாம் !
தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்.
ஏன் ? இத்தனைக்கும் காரணமான சோனியாவைச் சொல்லவேண்டியதுதானே!
ஆங்.... சொல்லமாட்டார். அது ஒருகாலத்தில் பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு அது தேவை. முதலில் இதை முடிப்போம் என்று முடிவெடுத்துவிட்டார் முன்னாள் முதல்வர் அம்மா!
இந்த ஆறுவித்தியாசங்களை யான் ஆராயத்தொடங்கிய நேரத்துக்கு இப்போது அடுத்த காட்சியும் வெளியாகிவிட்டது.
‘ புலிகளைக்கொன்றது சரியானது என்றுதான் முன்னமே தாம் சொல்லியிருந்ததாக நினைவுபடுத்தி, சோனியாவிடம் தமக்கு முன்னுரிமை கேட்கிறார் ஜெயலலிதா!
விட்டால் இவர்கள் இருவருமே , தேர்தல் முடியும்வரை இப்படி ஏதாவது புஷ்வாணம் விட்டுக்கொண்டேயிருப்பார்கள்.
அதனால், எனது கட்டுரையை நான் இப்போதே வெளியிடுகிறேன்!
தமிழா! நீ முட்டாளல்ல எனும் முடிவை நீ எப்போது வெளியிடப்போகிறாய்?
நன்றாக உணர்ந்து கொள்!!