நம்மண்ணுக்காய் மரணித்த மாவீரர் வரிசையில், முதற்பலியான வீரன்

நம்மண்ணுக்காய் மரணித்த மாவீரர் வரிசையில், முதற்பலியான வீரன்
லெப்.சங்கர்! யாழ்ப்பாணக்குடாநாட்டின் கடற்கரை நகரமான வல்வெட்டித்துறையில், கம்பர்மலை எனும் கிராமத்தில் பிறந்தவன் இவன் ! 19.06.1961 இல் பிறந்த இவனது இயற்பெயர் : செல்வச்சந்திரன் சத்தியநாதன். இவனது வீரமரணம், ஒரு வருட முடிவிலேயே உரிமைகோரப்பட்டது. 27.11.1983 அன்று, அவனுக்கான அஞ்சலிக்கவிதைகள் யாழ்.நகரத்தெருவெங்கும் சுவர்களை அலங்கரித்தன!
அக்கவிதைகளிலிருந்து ஒருசில :
 
விடைகொண்டவீரா ! வீறுடைவேங்கை !
விண்ணிலேவாழும் சத்தியநாதா !
குடைகின்றதையா குமுறிடும் நெஞ்சம் !
கூடிடும்நாளோ ஓராண்டுகாலம் !
மடையினைவென்ற வெள்ளமாய் ஓடும்
மனதில்நாம்கொண்ட இலட்சியம்யாவும் !
தடையினைவென்று தாயகம்காப்போம் !
தரணியில்காண்போம் தனித்தமிழ் ஈழம் !

மீளாத்துயிலில் ஆழ்ந்தநம்தோழா !
மீண்டுமிவண் வா ! சத்தியநாதா !
நாளானாலும் நாமுனைமறவோம் !
நாட்கள்சென்றால் நாமுனைத்தொடர்வோம் !
தூளாய்ப்போகும் துட்டரின்சட்டம் !
தூக்கியெறிந்திடுவோம் எமதிஷ்டம் !
காளான்போலும் கட்சிகளில்லை !
காண்போம்முடிவில் தனித்தமிழ் ஈழம் !

விடிகின்றவேளை வெளிவரும் அந்த
வெள்ளியைப்போலும் விடுதலைப்போரின்
அடித்தளமானாய் அன்பின்நம்தோழா !
ஆவியை ஈந்தாய் சத்தியநாதா !
கொடியவர்எதிரி இராணுவம்வசம் நீ !
கொடுத்திடவில்லை ஆயுதம்தன்னை !
கடிதினில்வந்தாய் !நம்வசம் தந்தாய் !
காலனோடேனோ காதலிற்சென்றாய் ?            ஆக்கம்:சிவம் அமுதசிவம்